Saturday, November 20, 2010

Can india Surpass china?????????

உலகப் பொருளாதார வளர்ச்சி என்கிற எக்ஸ்பிரஸ் ஹைவேயில் முதலிரண்டு இடத்தைப் பிடித்து மிக வேகமாக முன்னேறுகின்றன சீனாவும் இந்தியாவும். அடுத்து வரும் ஆண்டுகளில் சீனாவின் ஜி.டி.பி. 10%-லிருந்து படிப்படியாகக் குறைந்து, 8%-தை நோக்கி குறையும் என உலக வங்கி சொல்லி இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் ஜி.டி.பி. 8%-லிருந்து 10-%த்தை நோக்கிச் செல்லும் என்றே சொல்லி இருக்கிறது.



'அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திச் சென்று முதலிடத்தைப் பிடித்துவிடும்' என்று அடித்துச் சொல்கிறவர்கள் ஒருபக்கமிருக்க, 'இந்தியாவாவது சீனாவை முந்துவதாவது! அப்படி நடக்க வாய்ப்பே இல்லை!' என்று மறுத்துப் பேசுகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரும் முன் வைக்கும் வாதங்களை உன்னிப்பாகக் கவனித்தால், எந்தெந்தத் துறைகளில் சீனா பலமாக இருக்கிறது, எந்தெந்தத் துறைகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது தெளிவாகும். நம் பலவீனங்களை பலமாக மாற்றிக் கொண்டால்தானே நம்மால் போட்டியில் ஜெயிக்க முடியும்!

இளைய இந்தியா!

சீனாவோடு ஒப்பிடும் போது நமக்கு இருக்கும் சாதகமான விஷயம், அதிக அளவில் இளைஞர்கள் இந்தியாவில் குவிந்திருப்பதுதான். 1995-ல் 15 வயதுக்கும் குறைவானவர்கள் அல்லது 64 வயதுக்கும் அதிகமானவர்கள் எண்ணிக்கை மட்டும் 69%-க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றோ அது 56%-மாக குறைந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையை ஒரு சாபமாகப் பார்த்த சீன அரசாங்கம், ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்தது. இதனால், அங்கு மக்கள் தொகை பெருக்கம் கணிசமாகக் குறைந்தது. இந்தியாவும் மக்கள் தொகை பெருக்கத்தை ஒரு சாபமாகவே பார்த்தது. 1976-ல் இந்திரா காந்தி மிசா சட்டத்தை அமல்படுத்திய போது, கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவே, அதை கைவிட்டு விட்டு, வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் போதும் என்று பிரசாரத்தை மாற்றினார். இந்த பிரசாரத்தினால் இந்திய மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. அதே நேரத்தில் குழந்தைகளே இல்லை என்கிற அளவுக்கு மோசமான நிலைமையும் ஏற்பட்டுவிடவில்லை. விளைவு, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2020-ல் வேலை செய்யும் வயதில் இருப்பவர்கள் (20-40 வயது) இந்தியாவில் 13.60 கோடி பேர் இருப்பார்கள். ஆனால்

சீனாவில் அதே வயதில் இருப்ப வர்கள் வெறும் 2.30 கோடி பேர் மட்டுமே இருப்பார்கள் என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தவிர, பலருக்கும் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரியும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பிளஸ்.

4.5 கோடி தொழிலதிபர்கள்!

நமக்கு பாசிட்டிவ்வாக இருக்கும் இன்னொரு பெரிய விஷயம், நமது ஜனநாயகம். இந்தியப் பொருளாதாரம் தனிமனித சுதந்திரத்தின் மீது கட்டப்பட்டு இருப்பதால், தனிநபர்களே நமது பொருளாதாரத்தை நடத்திச் செல்கின்றனர். டாடா, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் ஆரம்பித்து, சாதாரண பெட்டிக் கடை வரை பிஸினஸ் செய்கிற வர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4.5 கோடி. ஊர் கூடி தேர் இழுக்கும் போது அது எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், தேரின் வடம் மக்கள் கையில் இருப்பதால், அது நிச்சயம் பின்னோக்கிப் போய்விடாது.

ஆனால், சீனாவில் நடப்பது கம்யூனிஸ அரசாங்கம். பேருக்குத்தான் அது கம்யூனிஸ அரசாங்கமே தவிர, அங்கு நடப்பது அடக்குமுறை ஆட்சிதான். அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதுதான் அங்கே நடக்கும். தொழிற்துறை தொடர்பான எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருப்பதால் நினைத்ததை நினைத்த நேரத்தில் அதனால் செய்துவிட முடியும். அதற்கு நடுவே எந்தத் தடை வந்தாலும் தகர்த்து எறிந்துவிடுகிறார்கள். இதனால் சீனாவில் மக்கள் உரிமை, சுற்றுச்சூழல் அக்கறை போன்ற பிரச்னைகளை யாருமே பேச முடியாத சூழல் நிலவுகிறது.

ஓலமிடும் உள்கட்டமைப்பு!

சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியாவுக்கு இப்படி சில பாசிட்டிவான அம் சங்கள் இருந்தாலும் நமக்கு நெகட்டிவ்வாக இருக்கும் விஷயங்கள் அதிகம். உதாரணமாக, உள்கட்டமைப்புத் துறை. புதிய சாலைகளை அமைத்தல், மின் உற்பத்தியைப் பெருக்குதல், புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டுதல் போன்ற அனைத்துமே உள்கட்டமைப்புத் துறையில் அடக்கம். சீன அரசாங்கம் அதன் உள்கட்டமைப்புத் துறைக்கு அதன் மொத்த ஜி.டி.பி.யில் 11% செலவழிக்கும் போது நாமோ நம்முடைய மொத்த ஜி.டி.பி.யில் 6% மட்டுமே செலவு செய்கிறோம். இதனால் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமலே இருக்கிறது. மின் நிலையங்கள் உருவாகாததால் நமக்குத் தேவையான மின்சாரமும் கிடைப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி என்பது பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்தியா 10% ஜி.டி.பி. வளர்ச்சி அடைய வேண்டு மெனில் ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும். ஆனால் இன்றையத் தேதியில் நமது மின் உற்பத்தி வெறும் 1.62 லட்சம் மெகா வாட் மட்டுமே உள்ளது. நாம் செல்லும் இடங்களில் எல்லாம் மின் விளக்குகளைப் பார்த்தாலும் பாதிக்கும் மேற்பட்ட இந்திய வீடுகள் இன்னும் மின் இணைப்புப் பெறாமலேயே இருக்கிறது. நமது சராசரி மின் பயன்பாடு 720 கிலோ வாட்டாக இருக்க, நம்மைவிட 20% மின்சாரத்தை அதிகமாகவே பயன்படுத்துகிறது சீனா.

இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. ஆனால் சீனாவில் 14 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை வசதி இருக்கிறது. இந்தியச் சாலைகளில் ஒரு லாரி சராசரியாக 20 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகப் போக முடியாது. கொல்கத்தாவிலிருந்து புறப்படும் ஒரு லாரி நான்கு மாநிலங்களைத் தாண்டி மும்பைக்கு வர 12 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஆகவேண்டும். இதனாலேயே ஒரு பொருளின் விலை 20%-த்துக்கு மேல் அதிகரித்துவிடுகிறது. இந்த லட்சணத்தில் இந்திய உள்கட்டமைப்புத் துறை வளர்ந்தால் சீனாவை எப்படி முந்த முடியும்? இனிவரும் நாட்களில் இந்தத் துறையில் நாம் முழுமூச்சாக இறங்குவது கட்டாயம்.

பரிதவிக்கும் பள்ளி, கல்லூரிகள்!

உலக அளவில் மிக இளைய வயதினர் நம் நாட்டில் இருந்தாலும் அவர்களைச் சரியான முறையில் வளர்த்தெடுக்க பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பாடத் திட்டங்கள் இல்லை. இன்றையத் தேதியில் நம் பள்ளிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, எக்கச்சக்கமான பணத்தை பெற்றோர்களிடமிருந்து வசூல் செய்து, உயர் தரமான கல்வி வழங்கும் பள்ளிகள்; இரண்டாவது, மனப்பாடம் மட்டுமே செய்ய கற்றுத் தரும் பள்ளிகள். இந்த இரு வகை பள்ளிகளில் இரண்டாவது வகை பள்ளிகளே அதிகம். பள்ளிகள் இப்படி என்றால், கல்லூரிகள் அதைவிட மோசம். இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான இடம்தான் கலைக் கல்லூரிகள் என்கிற அளவுக்கு அதன் தரம் மோசமாகிவிட்டது. இன்றைக்கு பட்டப் படிப்பு படித்துவிட்டு வரும் இளைஞனிடம் பெரிதாக எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க முடியாது என்கிற அளவுக்கு பல கல்லூரிகளின் தரம் இருக்கிறது.

கல்லூரிகளாவது பரவாயில்லை, பல்கலைக் கழகங்கள் இன்னும் மோசம். அஞ்சல் வழி மூலம் பெறும் பல்கலைக்கழகப் பட்டங்கள் இன்டர்வியூவில் காட்ட வேண்டுமானாலும் பயன்படுமே ஒழிய, அதனால் ஒரு இளைஞனின் உற்பத்தித்திறன் நிச்சயம் உயராது என்கிற அவல நிலையே இருக்கிறது. தவிர, என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலம் வெறும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை மட்டுமே உருவாக்கினால் போதாது; உடல் உழைப்பைக் காட்டும் இளைஞர்கள் இருந்தால் மட்டுமே எல்லா வகையிலும் வேலை செய்பவர்கள் கிடைப்பார்கள்.

ஆனால் சீனா கல்வித் துறை, நாட்டுக்குத் தேவையான வேலையாட்களைத் திட்டமிட்டு உருவாக்குகிறது. அதற்கேற்ற வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. படித்து முடித்தவுடன் அந்தந்தத் தொழிலுக்கு ஏற்ற தகுதி ஒவ்வொரு இளைஞனிடம் இருப்பதால், குறைவான அளவில் ஆட்கள் இருந்தாலும் அதிக உற்பத்தி செய்யும் தெம்பு சீனாவிடம் இருக்கிறது.

தாண்டவமாடும் லஞ்ச லாவண்யம்!

லஞ்ச லாவண்யம் என்கிற புற்றுநோய் நம் ஆட்சியாளர்களின் அனைத்துப் பிரிவினரிடமும் ஊடுருவி வருவது மிகப் பெரிய சாபம் என்றே சொல்ல வேண்டும். கட்சி வித்தியாசங்களைத் தாண்டி லஞ்சம் என்பது ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது. இதில் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் எதில் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம் என்கிற நிலை வந்துவிட்டது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி. உலக அளவில் கவனம் பெறும் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான மைதானங்களை அமைப்பதில் ஆரம்பித்து வீடு கட்டுவது வரை பல விஷயங்களில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஊழல் அம்பலமானதால் இந்தியாவின் பெயர் உலக அளவில் பெரிதாக டேமேஜ் ஆனது. சமீபத்தில் மும்பையில் கார்கில் போர்வீரர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியாகி, விசாரணை நடந்து வருகிறது. ஆனால், இதுவரை வெளிவந்த ஊழல்களைவிட வெளிச்சத்துக்கு வராத ஊழல்களே அதிகம். அதிலும் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்யும் பட்சத்தில் அந்த விஷயம் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.

ஆனால் சீனாவில் ஊழல், லஞ்ச லாவண்யம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தனிமனிதர்கள் இஷ்டப்படி அரசு வேலைக்கான கான்ட்ராக்ட்களை கொடுக்க முடியாது என்பதால் ஊழலுக்கோ, லஞ்ச லாவண்யத்துக்கோ வாய்ப்பில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த எந்த ஒரு நிறுவனமும் சீனாவில் தொழில் தொடங்க நினைக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கான அனைத்து அனுமதிகளும் அடுத்த சில நாட்களுக்குள் ஒரே இடத்தில் கிடைத்துவிடுகிறது.

ஆனால் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கத் தேவையான பல்வேறு அனுமதிகளை பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து வாங்குவதற்கே பல மாதம் ஓடிவிடுகிறது. தவிர, ஒவ்வொரு துறையிலும் கொழுத்த சன்மானம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்கிற சூழ்நிலை. 'அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அதே நேரத்தில் அமைச்சர்கள் தொழிலில் பங்கு கேட்கிற வழக்கமும் வந்துவிட்டது' என்று அங்கலாய்க்கிறார்கள் வெளிநாட்டுத் தொழிலதிபர்கள்.

ஆக மொத்தத்தில் சீனாவை முந்த வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் நம்மிடம் இருந்தால் போதாது. நமது பலவீனங்களை மாற்றி பலமாக ஆக்கிக் கொள்ளும் அக்கறையும் நம்மிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் ரேஸில் நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.


No comments:

Post a Comment