புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது இந்தியத் தலைமை எதிர்பார்க்காத ஒன்றாக இருந்திருக்காது. அதனை எதிர்பார்த்தும் மகிந்தவை புதுடில்லி அழைத்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. சீனாவுடன் நெருக்கமாகவுள்ள மகிந்தவை தமது பக்கத்துக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இதுவும் உள்ளது.
புதுடில்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்னான பேச்சுக்களை மீள ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் கொழும்பு திரும்பும் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பிலான செய்திகள் அடுத்தவாரம் முக்கியம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் இலங்கை நிலைமை தொடர்பில் இந்தியா எவ்வாறான அணுகுமுறையைக் கையாளப்போகின்றது என்ற கேள்வி எழலாம்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா இனநெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பது தொடர்பில் முக்கியமான சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தற்போதைய இந்திய விஜயம் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இம்மாத இறுதியில் யாழ்ப்பாணம் செல்லவிருக்கும் நிலையில் இந்தியத் தூதுவர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துக்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" எனக் குறிப்பிடும் காந்தா, 'இருந்தபோதிலும் நேரடியாகத் தலையிடுவது சாத்தியமில்லை" எனக் கூறுகின்றார். அதாவது இன நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை இவ்வாறானதாகவே இருக்கப்போகின்றது. ஆனால், 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த எவ்வாறான நடவக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்பதையிட்டு அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்தியத் தூதுவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் புதிதாக எதுவும் இல்லை என்பது உண்மைதான். இந்தியா வழமையாகத் தெரிவிக்கும் கருத்துத்தான் இது. ஆனால், இலங்கை நெருக்கடி தொடர்பில் தன்னுடைய அணுகுமுறைகளில் திடீர் வேகம் ஒன்றை அண்மைக்காலமாகக் காட்டிவரும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவையாக உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும் விடயத்தில் அக்கறையாக இருக்கின்ற போதிலும், அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் அது இல்லை என்பது உண்மை. இலங்கையைப் பொறுத்தவரையில் அழுத்தம் கொடுக்கக்கூடிய பிடி எதுவும் இல்லாத நிலையில்தான் தமிழ்ப் பகுதிகளில் பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா தனது கவனத்தை இப்போது குவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு என்பதற்கு அப்பால் காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதையை அமைத்துக் கொடுப்பதற்கான பணியையும் இந்தியாவே இப்போது பொறுப்பெடுத்திருக்கின்றது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்தியா மேற்கொள்விருக்கும் பணிகளில் இந்த ரயில் பாதையை அமைக்கும் பணியும், வீடமைப்புத் திட்டமும் வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகளில் முக்கியமானவை. இதனைவிட யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகராலயம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கின்றது.
நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களிடம் நெருங்கிவருவதற்கும், தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தியா முற்பட்டிருப்பதை இந்தியா மேற்கொள்ளும் இந்த சங்கிலித் தொடரான நகர்வுகளின் மூலமாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதன் மூலமாகவும், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்காததன் மூலமாகவும் தமது செயற்பாடுகளில் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள் என்பதை இந்தியா நன்கு புரிந்துகொண்டிருக்கின்றது. தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலையில் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய விதமாக எதனையும் செய்ய முடியாது என்பதும் டில்லிக்குத் தெரியும்.
இந்தியாவின் அண்மைக்கால காய்நகர்த்தல்களுக்கு இதுதான் முதலாவது காரணமாக இருக்கின்ற போதிலும் அது மட்டும் காரணமல்ல.
இதனைவிட வெகுவிரைவில் தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் ஈழப் பிரச்சினை முக்கிய விவாதத்துக்குரிய விடயமாக அமையும் என்பதால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான அழுத்தங்களைத் தம்மால் கொடுக்கக்கூடியதாக இருந்துள்ளது என்பதையும் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை மத்திய அரசுக்கு உள்ளது.
ஏனெனில் ஈழத் தமிழர்களின் தற்போதைய அவலங்களுக்கு டில்லியும் ஒரு காரணம் என்ற கருத்து தமிழகத்தில் உள்ளது. அந்தக் கருத்தை மாற்றியமைக்காமல் தமிழகத் தேர்தலைச் சந்திப்பது காங்கிரஸ் கட்சிககு மட்டுமன்றி கருணாநிதியின் தி.மு.க.வுக்குக் கூட சங்கடமான நிலையை ஏற்படுத்தும்.
இந்திய மத்திய அரசு இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களைக் குளிர்விக்கக்கூடிய வகையிலான தனது காய்நகர்த்தல்களை விரைவுபடுத்தியிருப்பதற்கு இவைதான் காரணம்!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவின் வருகை, இந்திய இராணுவத் தளபதியின் வருகை என்பவற்றைத் தொடர்ந்து இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவின் வருகை இம்மாத இறுதியில் இடம்பெறவிருக்கின்றது. யாழ்ப்பாணத்துக்கும் அம்பாந்தோட்டைக்கும் விஜயம் செய்யவுள்ள இந்திய அமைச்சர் இந்த இரண்டு இடங்களிலும் இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயங்களைத் திறந்துவைக்கவுள்ளார்.
இவ்வாறு இரு ஸ்தானிகராலயங்கள் திறந்துவைக்கப்படுவதில் முக்கியமான செய்திகள் உள்ளன.
ஒன்று - தமிழர்களின் கலாசார அரசியல் தலைமையகமாகவுள்ள யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகின்றது. இதன் மூலம் தமிழர்களுடனான தமது நெருக்கத்தைப் பிரதிபலித்துக்காட்ட இந்தியா முற்படுகின்றது.
இரண்டாவது - சிங்களக் கடும் போக்காளர்களின் கோட்டை எனக் கருதப்படும் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அம்பாந்தோட்டை பெற்றுள்ள முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அம்பாந்தோட்டையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதுடன், துறைமுகம் ஒன்றையும் ஏற்கனவே அமைத்திருக்கின்றது. அத்துடன் இந்தத் துறைமுக அமைப்புப் பணியைப் பயன்படுத்திக்கொண்டு அம்பாந்தோட்டையில் சீனா மேற்கொண்டுவரும் திட்டங்களும் முக்கியமானவை. இந்து சமுகத்திரப் பிராந்தியத்தில் தமது பிடியை இறுக்குவதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் இந்தியாவுக்கு உள்ளது.
இந்த நிலையில் அம்பாந்தோட்டையிலும் உயர் ஸ்தானிகராலயம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா முற்பட்டிருப்பதற்கு பல பரிமாணங்கள் உள்ளன.
இதனைவிட தமிழர்களுடன் மட்டும் இந்தியா நெருங்கிச் செல்கின்றது என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் உருவாகுவதையும் இந்தியா விரும்பவில்லை. சிங்களவர்களின் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடியவிதமாக தமிழர்களுக்குச் சாதகமான தீர்வொன்றுக்கான அழுத்தங்களைக் கொடுப்பது தமது நீண்ட கால நலன்களுக்குப் பாதகமானது என்ற கருத்து இந்தியாவுக்கு உள்ளது. அதனால்தான் 1980 களில் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்தியா, இப்போது அனைத்துத் தரப்பினருடைய அபிலாஷைகளையும் கவனத்திற்கொள்வதாக அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் தன்னுடைய நிலைப்பாடு எனக் காட்டிக்கொள்வதற்கு முற்படுகின்றது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 13 வது அரசியலமைப்புத் திருத்தம் என்பது அதற்கு உணர்வுபூர்வமானது. ஒருவகையில் சொல்லப்போனால் இந்தத் திருத்தமே இந்தியாவினால் தயாரிக்கப்பட்டதுதான். 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்iயின்படி இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் 13 வது திருத்தச் சட்டம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் குறைந்த ஒரு தீர்வாக இருக்கின்ற போதிலும், எந்த ஒரு தீர்வுக்கும் அடிப்படையாக இருக்கக்கூடியது இதுதான். அத்துடன் இலங்கை, இந்திய அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகவும் இதுதான் இருக்கின்றது.
சிங்களக் கடும்போக்காளர்களின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலேயே இந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும், அனைத்து அரசியல் கட்சிகளுமே இதனை ஏற்று இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாகாண சபை அரசியலில் பங்கேற்கின்றன. மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் தேவை என்பதை இக்கட்சிகள் வலியுறுத்துகின்ற போதிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரம் என்கின்றபோது அதற்கு எதிராதன நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.
இந்த நிலையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு என வரும்போது 13 பிளஸ் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சொல்லிக்கொண்டே, 13 வது திருத்தத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்கள் அனைத்தையும் திரும்பப்பெற்றுவிட்டார். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசு தன்னுடைய கைகளிலேயே வைத்துக்கொள்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைப்புடன், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்தான் முக்கியமானவை. இந்த மூன்றும் இல்லாத எந்தத் தீர்வும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அர்த்தமற்றதாகவே இருக்கும்.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தமானது நிலைமைகளை மேலும் மோசமாக்கியிருக்கின்றது. மாகாண சபைகளுக்கு 13 வது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரங்களையும் பறிப்பதாகவே இது அமைந்திருக்கின்றது. 13 பிளஸ் என இந்தியாவுக்குக் கூறிக்கொண்டே 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களையும் இலங்கை அரசு எடுத்துவிட்டது.
13 வது திருத்தம் இந்தியாவினால் கொண்டுவரப்பட்டது என்பதால் அதனை ஒரேயடியாகக் கிளித்தெறிவது இந்தியாவுக்கு ஆத்தரமூட்டுவதாக அமையும் என்பது கொழும்புக்குத் தெரியும். அதனால் அதிலுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் எடுத்து அர்த்தமற்ற ஒன்றாகவே 13 வது திருத்தத்தை அரசு வைத்துள்ளது. இந்த நிலையில் மகிந்தவின் டில்லி விஜயத்தின் போது அரசியல் தீர்வு தொடர்பாக நிச்சயமாகப் பேசப்படும். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரலாம். ஆனால் தற்போதுள்ள 13 வது திருத்தம் அர்த்தமற்ற ஒன்று என்பதையோ அதிலுள்ள அதிகாரங்கள் பின்கதவால் எடுக்கப்பட்டுவிட்டன என்பதோ தாம் புரிந்துகொண்டிருப்பதாக இந்தியா ஒருபோதுமே காட்டிக்கொண்டதில்லை.
ஆக, 13 வது திருத்தத்தை தற்போதுள்ள நிலையில் நடைமுறைப்படுத்துமாறு கோருவது ஈழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றும் ஒரு முயற்சியகவே இருக்கும். இணைப்பு, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் இதனை நடைமுறைப்படுத்துமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க டில்லி முற்பட்டால் அது அர்த்தமுள்ளதாக அமையும். ஆனால் இது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் இந்தியாவுக்கு உள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் புதுடில்லிப் பேச்சுக்களும், கிருஷ்ணாவின் வருகையும் இலங்கையில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்துவதாக அமைந்தாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் இதுவும் இருக்கப்போவதில்லை.
இவ்வாறு இனநெருக்கடி தொடர்பில் மகிந்த மீது அழுத்த்ததைக் கொடுக்க இந்தியாவினால் முடியாது போய்விட்டால், சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கப்படும் மகிந்தவை பாதுகாப்பதற்காக இந்தியா மேற்கொண்ட ஒரு முயற்சியாகவே இது அமையும். ஆதனைத்தான் வைகோவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
Source
http://pooraayam.com/news-analysis/1139-2010-10-13-04-56-37
No comments:
Post a Comment