கடத்தல் கும்பலிடமிருந்து கணவனை மீட்ட நவீன சாவித்திரி! |
'பெண் என்றால் பேயும் இரங்கும்' என்பார்கள். இங்கு ஒரு கொள்ளைக்கூட்டம், ஒரு பெண்ணின் அழுகைக்கு இரங்கி, பெரும்பணத்தை எதிர்பார்த்து கடத்திச் சென்ற அவளுடைய கணவனை கண்ணீருடன் விடுவித்திருக்கிறது! இந்த நவீன சாவித்திரியின் பெயர் சஞ்சனா சிங் என்ற குடியா. கணவன் அஜீத் சிங் (நவீன சத்தியவான்!) மற்றும் ஆறு வயது மகனுடன் டெல்லிக்கு அருகில், கிரேட்டர் நொய்டா (உ.பி. மாநிலம்) என்ற இடத்தில் வசித்து வருகிறார். ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் அஜீத் சிங், சில நாட்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவில் வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். பஸ் பாதி வழியில் பிரேக் டவுனாகிவிட, வேறு பஸ் கிடைக்காததால் தனியார் ஜீப் ஒன்றில் ஏறியிருக்கிறார். சில பயணிகளுடன் சென்ற அந்த ஜீப், நிற்காமல் சென்றுகொண்டே இருக்க, 'ஏதோ தவறு நடக்கிறது' என்று உணர்ந்து அபயக்குரல் கொடுக்க முயன்ற அஜீத்தை, பயணிகள் போர்வையிலிருந்த கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் கரங்கள் அடக்கியுள்ளன. பிறகு, வேறு ஒரு கும்பலிடம் கை மாற்றிவிடப்பட்ட அஜீத், மற்றொரு ஜீப்பில் ஏற்றப்பட, அது ராஜஸ்தான் மாநில எல்லையைத் தாண்டி விரைந்திருக்கிறது. விடிந்தபோது, தான் இருப்பது சம்பல் பள்ளத்தாக்கு என்பதும், சம்பல் கொள்ளையர்களால் தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதும் அஜீத்துக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அஜீத்தின் மொபைல் மூலமாகவே அவருடைய வீட்டுக்குப் போன் செய்த கொள்ளையர்கள், "உன் கணவனை ஒரு ஆள் கடத்தி வந்து, எங்களிடம் விற்றுவிட்டான். பத்து லட்ச ரூபாய் தந்தால், உன் கணவன் கிடைப்பான். போலீஸிடமோ... அல்லது வேறு யாரிடமோ இதைப்பற்றி சொன்னால்... உன் கணவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இரண்டு நாள் கெடுவுக்குள் பணத்தை தயார் செய்து கொண்டு வா. எந்த இடத்துக்கு வர வேண்டும் என்பதை போன் மூலமே பிறகு சொல்கிறோம்...' - சினிமாக்களில் நாம் கேட்டுப் பழகிய அதே கடத்தல் வசனத்தை பேசியிருக்கிறார்கள். இதைக் கேட்டதுமே, செய்வதறியாது கண்ணீர் விட்டு அலறித் துடித்த குடியா, அதன் பிறகுதான் துணிச்சலான அந்த முடிவை எடுத்திருக்கிறார். மேற்கொண்டு நடந்தவற்றை அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்... "என் கணவரோட உயிருக்கு நானே ஆபத்து ஏற்படுத்திடக்கூடாதுனு போலீஸ்கிட்ட போகல. ஆனா, அவங்க கேட்ட அளவுக்கு பத்து லட்ச ரூபாய் பணமும் எங்ககிட்ட இல்ல. பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் பண்ணிட்ட எங்களுக்குப் பணம் கொடுத்து உதவறதுக்கும் யாருமில்ல. ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சேன். வீட்டுல இருந்த பத்து பவுன் நகையோட, கையில இருந்த 43 ஆயிரம் ரூபாயையும் எடுத்துட்டு தனியாவே போய் அவரை மீட்கறதுனு முடிவெடுத்தேன். திரும்பவும் போன் பண்ணி ஆக்ரா பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொன்னாங்க. பணத்தோட தனியாவே போனேன். அங்கயிருந்து அவங்களோட ஜீப்ல என்னை ஏத்திக்கிட்டு, மனித நடமாட்டமே இல்லாத சாலைகள்ல ஓட ஆரம்பிச்சுது ஜீப். ஒரு கட்டத்துல சாலையே இல்லாத ஒரு இடத்துல நின்னது வண்டி. அந்தப் பொட்டல் காட்டுல நாலு மணி நேரம் நடக்க வச்சு, பாழடைஞ்ச ஒரு கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. வழியெல்லாம், 'ஒருவேளை போலீஸ்கிட்ட போயிருக்கலாமோ..? வேற யார்கிட்டயும் சொல்லியிருக்கலாமோ..? தனியா வந்திருக்கற நம்மளோட இந்த முடிவு சரியா?'னு மனசுக்குள்ள கேள்விகள் உருள, இன்னொரு பக்கம், 'என் கணவர் என்ன ஆனாரோ..?'ங்கற தவிப்பு என்னைக் கொல்ல, என் மனசு துடிச்ச துடிப்பு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்" என்றவர், அந்த நேரத்தில் பட்ட அவஸ்தைகளை சொன்னபோது, அவருடைய வார்த்தைகளிலும் பற்றியது பதற்றம். "கோயில்ல, எட்டுப் பேர் துப்பாக்கியோட நின்னாங்க. அவங்க என் பணத்தையும் பிடுங்கிட்டு, என்னை என்ன வேணாலும் செஞ்சு, பொணமா போட்டாலும் கேட்க யாருமில்லைங்கற உண்மை மனசுக்கு உறைச்சப்போ, என் உடம்புல இருக்கற ஒவ்வொரு செல்லும் நடுங்குச்சு. என் கணவர் கண்ணுக்குள்ள நிழலாட, கோயில்ல இருந்த அந்தக் கடவுள்கிட்ட 'என் கணவரை மீட்க எனக்கு சக்தி கொடு'னு வேண்டினேன். தைரியத்தை வரவழைச்சுட்டு, 'என் கணவர் எங்க?'னு அந்தத் துப்பாக்கிகாரங்ககிட்ட கேட்க, என் கணவரை துப்பாக்கி முனையில கூட்டிட்டு வந்தாங்க. அதைப் பார்த்தவொடன, என் உடம்பே வெடிச்சுடும் போல கதறி அழுதேன்" என்ற குடியாவின் கண்களில் மல்கிய நீரை துடைத்து விட்டபடி தொடர்ந்தார், கணவர் அஜீத் சிங்... "இதோ... இந்தக் கண்ணீர்தான் கொள்ளைக்கூட்ட தலைவன் பீமாவோட மனசை கலக்கிடுச்சு. அழுது அரற்றின குடியாவோட கோலத்தைப் பார்த்த பீமா, 'சகோதரி, அழாத. உன் கணவரை ஒண்ணும் பண்ண மாட்டோம். முதல்ல இந்த தண்ணியக் குடி'னு சொல்ல, அவரோட வார்த்தையில கொஞ்சம் தெம்பான குடியா, 'எங்கிட்ட இருந்ததையெல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன். இதை வச்சுக்கிட்டு, என் கணவரை விட்டுடுங்க. நீங்க குடும்பத்தோட நல்லா வாழ்வீங்க'னு கண்ணீரும் கம்பலையுமா கெஞ்சி, தான் கொண்டு வந்திருந்த பணம், நகையை எடுத்து பீமாகிட்ட கொடுத்தா..." என்று அஜீத் நிறுத்த, அடுத்து நடந்த அதிசயத்தை சொல்லத் தொடங்கினார் குடியா. "தரையில அழுது புரண்டு கிடந்த எம்பக்கத்துல உட்கார்ந்த பீமா, என் கையை கரிசனத்தோட பிடிச்சு, 'சம்பல் காட்டுல இந்த 50 கிலோ மீட்டர் சுத்துமீட்டர் தூரத்துக்குள்ள எங்களை மீறி ஆம்பளைங்களே வர பயப்படுவாங்க. இதுவரைக்கும் எந்தப் பொண்ணும் வந்ததில்ல. நாங்க கொள்ளைக்காரங்கனு தெரிஞ்சும், உன் கணவனை மீட்கறதுக்காக உயிரையும் துச்சமா மதிச்சு நீ வந்திருக்க. கணவன் மேல நீ வச்சுருக்கற பாசத்துக்கு முன்னால, எங்களோட அரக்க குணம் தூள்தூளாகிடுச்சு. உன்னோட உண்மையான கண்ணீருக்கு எங்களால பதில் சொல்ல முடியல. இனி நீ எங்களோட சகோதரி. நீ கொண்டு வந்த பணம், நகையை எல்லாம் திருப்பி எடுத்துக்கோ'னு சொல்ல, சில நொடிகளுக்கு என்ன நடக்குதுனே புரியல எனக்கு" என்று வியப்பில் ஆழ்ந்த குடியா, அடுத்து சொன்னது வியப்பின் உச்சம்! "தன்கிட்ட இருந்த ஒரு ஜோடி கம்மலை எடுத்துக் கொடுத்த பீமா, 'சகோதரி... உன் மொத்த நகையையும் கழட்டி மூட்டைக்கட்டிட்ட. உன் வெறும் காதை பார்க்க சகிக்கல. இதப் போட்டுக்கோ'னு சொன்ன பீமா, கையிலிருந்த பணத்தை (5,100 ரூபாய்) அள்ளிக் கொடுத்து, 'இது என் சகோதரிக்கு நான் கொடுக்கற அன்புப் பரிசு. மறுக்காம வாங்கிக்கோ'னு சொல்ல, பொலபொலனு ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பிச்சுடுச்சு எனக்கு. நான் நிதானிக்கறதுக்குள்ள என் கால்ல விழுந்த பீமா, என் பாதங்களத் தொட்டு வணங்கினார். நான் பதற, 'சந்தோஷமா உன் கணவரை கூட்டிட்டுப் போ'னு கண்கள்ல நீரோட சொல்லி வழி அனுப்பி வச்சார். எல்லாத்துக்கும் மேல, மறுநாள் போன் செய்து, நாங்க பத்திரமா வீடு திரும்பிட்டோமானு உறுதியும் செஞ்சுகிட்டார்" என்று அவர் சொல்லி நிறுத்தியபோது, ஒரு முழுநீள திகில் சினிமாவைப் பார்த்தது போன்ற உணர்வு மேலிட்டது நமக்கு. "நடந்த சம்பவங்களை இப்போ நினைச்சுப் பார்த்தா நம்ப முடியலைனாலும், என் கணவர் மேல நான் வச்ச பாசம்தான் அவரை எனக்கு மீட்டுக் கொடுத் திருங்குங்கறதை நான் நூறு சதவிகிதம் நம்ப றேன்!" - எளிமையான வார்த்தைகளில் தன் முழுமையான அன்பை குடியா சொன்னபோது, எமனிடம் இருந்து தன் கணவன் சத்தியவானை மீட்ட புராண சாவித்திரி நம் கண்களில் மின்னினார். தொடர்ந்தவர், "யாரோ ஒரு அரசியல்வாதி பீமாவோட நிலத்தை பிடுங்கினதோட, பொய் வழக்கு போட்டு சிறையில தள்ளிட்டதால, அவன் இப்படி தடம் மாறிப் போயிட்டானாம். அரசு முயற்சித்தா, அவங்கள நல்வழிப்படுத்தி சமூக வாழ்க்கைக்கு மறுபடியும் கொண்டு வர முடியும். இனி என் பிரார்த்தனைகள்ல அவங்களோட விடியலுக்கான வேண்டுகோளும் கட்டாயம் இருக்கும்!" - உள் மனதிலிருந்து சொன்னது அந்த பெண் மனசு!
|
No comments:
Post a Comment