Sunday, August 8, 2010

தஞ்சை பெரிய கோவிலின் 1,000 ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25,26-ம் தேதிகளில் கொண்டாடப்படும் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் 1,000 ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25,26-ம் தேதிகளில் கொண்டாடப்படும் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் பற்றி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் செப்டம்பர் 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகளை நகரின் பல பகுதிகளில் நடத்துவது என்றும், மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியினை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்கு பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும் நடத்துவது என்றும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகளை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரிகளையும், பல்வேறு சான்றோர்களையும், ஆன்றோர்களையும், அரசியல் தலைவர்களையும் அழைப்பது என்றும்; தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைவதையொட்டி வரலாற்று கண்காட்சி ஒன்றை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், கோ.சி.மணி, கே.என்.நேரு, பரிதிஇளம்வழுதி, கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment