Friday, September 17, 2010

உலக அதிகாரத்தின் கிழக்கு நோக்கிய நகர்வும் தெற்காசியாவும்

அண்மைக்காலமாக சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் பாரிய மாறுதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது உலகளாவிய அதிகாரத்தின் கிழக்கு நோக்கிய அதுவும் குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளை நோக்கிய நகர்வேயாகும். சில வாரங்களுக்கு முன்னர் "ஒரு பயணம்%27 என்ற தலைப்பில் தனது சுயசரிதையை வெளியிட்டிருக்கும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் தான் பதவியில் இருந்து விலகிய பின்னர் சர்வதேச அரசியலில் ஏற்பட்டிருக்கும் பிரதான மாற்றங்கள் குறித்து அதில் குறிப்பிடுகையில் "21 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் போன்ற நாடுகள் உட்பட மேற்குலகம் எமக்கு சமமானவர்களாக சிலவேளையில் சமமானதுக்கும் கூடுதலானவர்களாக வரக்கூடிய பங்காளிகளுடன் பணியாற்றுவதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது%27 என்று கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் இது மேற்குலக நாடுகளுக்கு ஒரு சவாலாகவே அமையக்கூடும். ஆனால், யதார்த்த நிலைவரத்தை ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கும் உலகின் பூகோள அரசியல் அடிப்படைமாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் மேற்குலகம் தயாராயிருக்க வேண்டும் என்றும் பிளயர் வலியுறுத்தியிருக்கிறார்.


ஆசிய அரங்கிற்கு நகர்ந்து கொண்டிருக்கின்ற உலக அதிகாரத்தின் மையங்களாக சீனாவும் இந்தியாவுமே அமைந்திருப்பதால் அந்த நகர்வு எமது தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து அக்கறைப்படவேண்டிய பொறுப்பு எம்மெல்லோருக்கும் இருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான


சஞ்சலமான உறவுகளின் அடிப்படையில் நோக்குகையில் இது மேலும் முக்கியத்துவமுடையதாகிறது. கடந்தவாரம் புதுடில்லியில் இந்திய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் சீனா தெற்காசியாவில் அதன் செல்வாக்கை விஸ்தரித்து ஆழமாகக் கால் பதிப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறது என்று விசனம் தெரிவித்திருக்கிறார். "சீனாவின் இந்த நோக்கங்களை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். யதார்த்த நிலைவரத்தின் அடிப்படையில் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும். சீனாவின் தலைமைத்துவம் இன்னும் இரு வருடங்களில் மாற்றமடையப் போகிறது. சீனர்கள் மத்தியில் புதியதொரு தன்முனைப்பைக் காணக் கூடியதாகவும் இருக்கும். அது எந்தத் திசையில் செல்லும் என்பதைக் கூறுவது கஷ்டமானதாகும். எனவே, நாம் தோன்றக்கூடிய புதிய நிலைவரத்துக்கு முகங்கொடுக்க எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்%27 என்றும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.


அதேவேளை, இந்திய ஆயுதப் படைகளின் தளபதிகளின் கூட்டு மகாநாடொன்றில் இவ்வாரம் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி சீனா அதன் இராணுவ மற்றும் பௌதீகக் கட்டமைப்புகளை எல்லையோரங்களில் விரைந்து மேம்படுத்தி வருகின்றமை குறித்து இந்தியா அலட்சியமாக இருக்கமுடியாது என்று தெரிவித்திருக்கிறார். பிராந்தியத்தில் இந்திய ஆயுதப்படைகள் மேலோங்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த இராணுவ நவீனமயமாக்கலைத் துரிதப்படுத்த வேண்டுமென்று படைத்தளபதிகளை அந்தோனி கேட்டிருக்கிறார். பிரதமர் சிங்கினதும் பாதுகாப்பு அமைச்சரினதும் கருத்துகள் பிராந்தியத்தில் சீனாவின் தன்முனைப்பு தொடர்பில் இந்தியா எந்தளவுக்கு கவலை கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. இந்தியா எப்பொழுதுமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்களில் திடீரென்று நித்திரை விட்டெழுந்தவனைப் போன்றே செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தெற்காசியப் பிராந்திய நாடுகள் வெளிநாடுகளின் உதவியை நாடும் விடயத்தில் தனது அக்கறைகளைக் கவனத்தில் எடுக்காமல் செயற்படக்கூடாது என்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்துவந்தது. இதை பெருமளவுக்கு புதுடில்லியினால் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு நீண்ட காலகட்டமும் இருந்தது. ஆனால், நிலைவரம் தற்போது கணிசமான அளவுக்கு மாற்றமடைந்துவிட்டது.


தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை சீனாவுடனான கெடுபிடி யுத்தத்தில் இந்தியா அண்மைக் காலமாக பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வந்திருக்கிறது. நிலைவரத்தை மறுதலையாக்குவதற்கு உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலையிலும் இந்தியா இல்லை என்று தான் கூறவேண்டும். தெற்காசியாவிலும் இந்து சமுத்திரத்திலும் சீனாவின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்துவருவதை உறுதியான முறையில் தடுப்பதற்கு இந்தியாவினால் இயலுமாக இருக்கவில்லை. இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு புதுடில்லியைத் தடுமாற்றமடைய வைத்திருக்கிறது. தனது கேந்திர முக்கியத்துவ நலன்களுக்கு முரணாக அமையக்கூடிய நடவடிக்கைகளில் இறங்கியிருந்த அயல்நாடுகளை முன்னர் "தண்டிக்கக்%27 கூடியதாக இருந்ததைப் போன்ற வல்லமையை இராஜதந்திர ரீதியில் இந்தியா தற்போது கொண்டிருக்கவில்லை. இதனால் சீனாவின்


செல்வாக்கு அதிகரிப்புக்கு எதிராகப் புதிய கேந்திர முக்கியத்துவ நேச அணிகளை நாடவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவே அமெரிக்காவுடனும் மேற்குலகுடனும் கிழக்கில் ஜப்பான் போன்ற நாடுகளுடனுமான இந்தியாவின் அண்மைக்கால கடும் நெருக்கமாகும்.


இராணுவ வல்லமையைப் பொறுத்தவரை உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது; ரஷ்யாவுக்கு அடுத்ததாக நான்காவது இடத்திலேயே இந்தியா இருக்கிறது. அண்மைக் காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மூண்டிருக்கக் கூடிய எந்தவொரு இராஜதந்திரத் தகராறும் கூட சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ளப்பட்டதையே காணக்கூடியதாக இருந்தது. ஜம்முகாஷ்மீரில் உள்ள மக்களுக்கு ஏனைய இந்தியர்களுக்கு வழங்கப்படுவதையும் விட பிரத்தியேகமான விசாவை வழங்கியது போன்ற சில நடவடிக்கைகள் மூலமாக சீனா இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் சீண்டிப்பார்த்த போதிலும் நிலைவரம் பாரதூரமானதாக மாறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியா மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும் பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் கூடுதலான அளவுக்கு வல்லமை கொண்டதாக மாறியிருக்கிறது.


ஆனால், சீனாவைப் போன்று பல பிராந்தியங்களுக்கும் அதன் பொருளாதார வல்லமையின் செல்வாக்கைப் பிரயோகிக்கக் கூடிய நிலைக்கு இன்னமும் இந்தியா வளரவில்லை. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடாக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு குறித்து இந்தியா உஷாரடைந்தாலும் கூட, உறவுகள் படுமோசமாகச் சீர்குலையக் கூடியதாக எந்தவிதமான ஆத்திரமூட்டும் அணுகுமுறையையும் புதுடில்லி கடைப்பிடிக்கப் போவதில்லை. உலக அதிகாரத்தின் கிழக்கு நோக்கிய நகர்வு பிராந்தியத்தின் இரு வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான பலப்பரீட்சைக்கான களமாக நாளடைவில் தெற்காசியாவை மாற்றிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
Thanks to kural

No comments:

Post a Comment